ராமநாதபுரம் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை

நகர் பகுதியில்நடிகர் வடிவேலு திரைப்பட பாணியில் திருடிய வீட்டில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகள் திருட்டு
ராமநாதபுரம் பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை இரும்பு ராடால் உடைத்து வீட்டினுள் இருந்த தங்க நகைகள் திருட்டு... மோப்ப நாயை திசை திருப்புவதற்காக மிளகாய் பொடி மற்றும் மீன் குழம்பு பொடியை வீசி சென்ற மர்ம நபர்கள். ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவர் கோயம்புத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் உணவகம் நடத்தி வருகிறார். ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் கடந்த நான்கு மாதங்களாக கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அவரது வீட்டை பராமரிப்பதற்காக அவரது உறவினர்களிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார். ரவிசந்திரன் கடந்த வாரம் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வந்து அவரது வீட்டில் தங்கி விட்டு மீண்டும் கோயம்புத்தூர் சென்றுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் உறவினர், வீட்டினுள் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சென்ற போது வீட்டின் முன் வாசல் கதவு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கேணிக்கரை காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுனுள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் ராமநாதபுரம் தடயவியல் துறை போலீசார் வீட்டில் கைரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் தலைவாசல் கதவை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை மோப்ப நாய் பைரவி உதவியுடன் மர்ம நபர்களை தேடுவதற்காக திருட்டு நடந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது. ஆனால் மர்ம நபர்கள் போலீஸ் மோப்ப நாயை திசை திருப்புவதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடி மற்றும் மீன் குழம்பு பொடியை வீசி சென்றுள்ளனர். நடிகர் வடிவேலு திரைப்படப்பாணியில் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வீட்டினுல் இருந்த 6 சவரன் தங்க நகை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் வீட்டின் உரிமையாளர் ரவிச்சந்திரன் கோயமுத்தூரில் இருந்து வந்த பின்னர் காணாமல் போன நகைகளின் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story