ஜெயங்கொண்டம் இஸ்லாமியர்களின் மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக .இஸ்லாமியர்கள் தகவல்

X
அரியலூர், ஜூன்.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயானம் அமைந்துள்ளது. அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடமென்று இஸ்லாமிய அமைப்பினர் ஒரு தரப்பிலும், அரசு புறம்போக்கில் உள்ளது என மற்றொரு தரப்பிலும் கூறப்பட்டு பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும் இதுநாள் வரை பிரச்சனைக்குரிய இடத்தில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றப்படவில்லை. இதில் அதிர்ச்சி அடைந்த ஜெயங்கொண்டம் ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய கட்சி, எஸ் டி பி ஐ ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளரிடம் ஜெயங்கொண்டம் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்ததாவது:- வக்பு வாரியத்திற்கு சொந்தமான மயான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறைப்படி அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர். உறுதி அளித்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் திட்டமிட்டபடி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story

