அரியலூர் மாவட்டத்தில் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்.

X
அரியலூர் ஜூன்.27- அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், முதன்மை மீட்பாளர்களுக்கான அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தொடங்கி வைத்து, கார்டியாக் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் (ட்ரட்மில்) பரிசோதனை அறையினை திறந்து அதன் செயல்பாடுகள் மற்றும் சோதனை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ் ஓர் அங்கமான தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு செயல்பாட்டின் கீழ் அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியானது முதன்மை மீட்பாளர்களுக்கு (பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள், அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்) இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: அவசர காலங்களில் மருத்துவ உதவிகள் தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு முன் செய்யவேண்டிய பணிகள் குறித்து மேலை நாடுகளில் பொதுமக்களுக்கு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகை அதிகமாக உள்ள நமது நாட்டிலும் தொலைதூரத்தில் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய முன்னெடுப்புகள் தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போர் நடைபெறும் காலங்கள் மற்றும் கொரேனா பாதிப்பு ஏற்பட்ட காலங்களிலும் சூழலுக்கேற்ப அவசரக கால மருத்துவ பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி இன்றையதினம் வழங்கப்படுகின்ற அடிப்படை உயிர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆரம்ப விபத்து மேலாண்மை பயிற்சியினை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு முன் செய்யவேண்டிய முதலுதவி சிகிச்சைகளை அறிந்துகொள்ளும் வகையில் இப்பயிற்சியினை உங்களோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் இதனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார். தொடர்ந்து, பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினார்.இப்பயிற்சியில் ஒருவருக்கு விபத்து மற்றும் மருத்துவ அவசர நேரங்களில் செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள், நெஞ்சழுத்த உயிரூட்டல் சிகிச்சையின் (CPR) முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்முறை பயிற்சி மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இதேபோன்று 108 அவசர ஊர்தியின் முக்கியத்துவம், அழைக்கும் முறை, 108 அவசர எண்ணை தொடர்பு கொள்ளும் போது தகவல் அளிக்கும் முறை மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள Treadmill (ட்ரெட்மில்) பரிசோதனை கருவி இன்றுமுதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இந்த பரிசோதனை முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. இந்த பரிசோதனையானது சாதாரண நிலையிலும் உடற்பயிற்சியின் போதும் இதயத்தின் செயல்பாட்டினையும் இதய தசைகளின் செயல்பாட்டினையும், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினையும். இதய துடிப்பில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டறிய உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான சூழ்நிலையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தேவைக்கேற்ப மேல் பரிசோதனை மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ள உதவும். இந்த சேவையானது அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை ஞாயிறு தவிர காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உறைவிட மருத்துவர் கொளஞ்சிநாதன், அவசர சிகிச்சைத் துறைத்தலைவர் (பொ) டாக்டர் ஷாபி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மருத்துவர்கள் டாக்டர் கௌதமதி, டாக்டர் செல்வகுமார், டாக்டர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

