ரயில் ஏறும் போது தவறி விழுந்து வாலிபர் பத்திரமாக மீட்பு!

X
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் போது தவறி விழுந்து ரயில் மற்றும் நடைமேடை இடையே சிக்கிய வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூர் இபி காலனியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் வீர பிரசாத் (29). திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பில் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதியா விரைவு வண்டி நடைமேடை 2 இல் வந்தபோது அவர் சீட் பிடிக்க அவசரமாக ஓடி ரயில் வண்டியில் ஏறினார். அப்போது தவறி விழுந்ததில் ரயில் வண்டிக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கிக்கொண்டார். அவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்த பயணிகள் சிமெண்ட் பலகையை உடைத்து அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக ரயில் சுமார் 46 நிமிடங்கள் நின்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். வீர பிரசாத், தாம்பரம் - செங்கோட்டை தாம்பரம் விரைவு வண்டியில் விருதுநகரில் இருந்து திருவாரூருக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளார். கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் வரை செல்ல மேற்கண்ட ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டபோது தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story

