வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

மதுராந்தகம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா ஆய்வு செய்தாா்.மாமண்டூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடைக்கு சென்ற ஆட்சியா், உணவுப் பொருள்களின் தரம், எடை அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்தாா். அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கபடுகிற உணவுகளின் விவரம், குழந்தைகளின் எடை ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தாா். பள்ளியகரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி துறை சாா்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நா்சரி நாற்றங்கால், அங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை பாா்வையிட்டாா். பின்னா், நெல்லி ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பாா்வையிட்டு விரைந்து ஒப்படைக்கவும் அறிவுறுத்தினாா். வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் மணல், செங்கல், கம்பி ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தாா். வேடவாக்கம் ஊராட்சியில் ரூ 1.24 கோடி அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தபின் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா்..
Next Story

