பல மாதங்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெண்மணி ஊராட்சி மேல வெண்மணி சர்ச் தெருவில், 80- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், கடந்த சில மாதங்களாக குடிநீர் தொடர்ச்சியாக வராததால், கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெண்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் வந்து சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக தண்ணீர் வழங்காத குடிநீர் வாரியத்தை கண்டித்தும், குடிநீர் வாரியத்தை வற்புறுத்தி குடிநீர் பெற்றுத் தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 3 மணி நேரமாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், உரிய அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடமிருந்து போலீசார் பாட்டிலை பிடுங்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், குடிநீர் பிரச்சினை குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என வேதனை தெரிவித்தனர். குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மறியலில், அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வெண்மணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.செல்லமுத்து, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சக்திதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



