ஸ்ரீபெரும்புதுார் மருத்துவமனையில் மது அருந்திய உதவியாளர்

X
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் நாள்தோறும் பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில், மருத்துவ உதவியாளராக பணியற்றி வரும் இளையராஜா, அவசர சிகிச்சை பிரிவில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது, பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் ஜெயபாரதி கூறியதாவது: இது சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். இதையடுத்து, அவர் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் உதவியாளர்கள் இல்லாததால், மீண்டும் அவர் ஸ்ரீபெரும்புதுா் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

