புறவழிச்சாலை பணியால் விபத்து அபாயம்

புறவழிச்சாலை பணியால் விபத்து அபாயம்
X
சிவகங்கையில் உயர்நிலை பாலம் அமைந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம்
சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சூரக்குளம் சாலை, வேம்பங்குடி அருகே 2 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்தச் சாலை பணிகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதற்கட்டமாக காஞ்சிரங்காலில் திருப்பத்தூா் நெடுஞ்சாலையிலிருந்து கல்குளம் அருகே இளையான்குடி நெடுஞ்சாலை வரை 7.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.77.16 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புறவழிச் சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும், வண்டவாசி சாலையிலிருந்து தொண்டி சாலை வரை மட்டும் உள்ள புறவழிச் சாலையை வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தச் சாலையில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் வசதிக்காக உயா்நிலைப் பாலம் அமைக்கப்பட்டது. இது முறையாக திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் புறவழிச் சாலை, பனங்காடி சாலை சந்திப்பு அருகிலேயே இறங்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் உயா்நிலைப் பாலத்திலிருருந்து பள்ளமான பகுதியை நோக்கி வேகமாக வரும் வாகனங்கள் பனங்காடி சாலையின் குறுக்கே கடக்கின்றன. அருகிலேயே அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவா்கள் விடுதிக் கட்டடம் இருப்பதால் பனங்காடி, ரோஸ் நகா் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களால், உயா்நிலைப் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மிக அருகிலேயே கேந்திரிய வித்யாலயா பள்ளியும் உள்ளது. இதனால், அதிக வாகனங்கள் செல்லக்கூடிய இந்தப் பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் மேம்பாலம் அருகே போதிய தடுப்பு அரண்களை வைக்கவும், உயா்கோபுர மின்விளக்கு அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
Next Story