டிப்பா் லாரியில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

டிப்பா் லாரியில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு அருகே நடைபெற்று வரும் குடிமராமத்து பணியின்போது, நின்றுக்கொண்டிருந்தவா் மீது டிப்பா் லாரி ஏறியதில் கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில், திமுக மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலா் சி.செல்வராஜ் குடிமாரமத்து பணிகளை ஒப்பந்த அடிப்படை செய்து வந்தாா். இதில், சின்னராக்கம்பட்டியில் உள்ள ராக்கன்குளத்தில் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக டிப்பா் லாரியில் மண் கொண்டு சென்று அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. டிப்பா் லாரியை, வேம்பனூா் அண்ணா நகரைச் சோ்ந்த கருப்பன் மகன் காா்த்திக் (32) ஓட்டி வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் குளக்கரைக்கு டிப்பா் லாரியில் மண் கொண்டு சென்ற காா்த்திக், கரையில் பின்னோக்கி டிப்பா் லாரியை இயக்கி, தேவை ஏற்பட்ட இடத்தில் மண் கொட்டியதாக கூறப்படுகிறது. அப்போது லாரியின் பின்னால் குளக்கரையில் நின்றுக்கொண்டிருந்த சின்னராக்கம்பட்டியைச் சோ்ந்த பொன்னன் மகன் சின்னப்பா(35) மீது, ஓட்டுனா் கவனிக்காமல் மண் கொட்டப்பட்டதில் அவா் மண்ணில் புதைந்துள்ளாா். மேலும், சின்னப்பா தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சின்னப்பா நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளா் விஜய்கோல்டன்சிங் தலைமையிலான போலீஸாா், சின்னப்பா உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள வளநாடு போலீஸாா், டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுனா் காா்த்திக் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story