பெண் ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கினார் ஆளுநர்
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் அமலா. வாடகை ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டிவிட்டு, இரவு 10 மணிக்கு மேல், மீண்டும் செங்கல்பட்டு திரும்பிவிடுவார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் இவர் கவுரவிக்கப்பட்ட போது, தனக்கு சொந்தமாக ஆட்டோ வேண்டும் என்பது குறித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து, ஆளுநர் தனது விருப்ப நிதியில்இருந்து ஆட்டோ வழங்கியுள்ளார். இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி, கடின உழைப்பாளியான ஆட்டோ ஓட்டுநரும், முன்னோடி பெண் தொழில் முனைவோருமான அமலாவின் எழுச்சியூட்டும் பயணம் மற்றும் கனவுகளுக்கு ஆதரவையும் ஊக்கத்தையும் தெரிவிக்கும் அடையாளமாக, புதிய ஆட்டோவின் சாவியை, ராஜ்பவனில் வழங்கினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின் போது, தனது மீள்தன்மை, வலிமை மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மையுடன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும் , தனது மகள்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும், ஆட்டோ ஓட்டும் துறையில் வாடகை ஆட்டோ ஓட்டிவரும் அன்றாடப்பணிக்காக அவர் பாராட்டப்பட்டார். தனது அமைதியான மன உறுதியால் அவர் ஆளுநரை மிகவும் நெகிழச்செய்தார். அமலாவின் மன உறுதி, உறுதிப்பாடு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கிய புதிய பாரதத்தின் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாடலின் முன்னோடியாகத் திகிழ்கிறார் என கூறப்பட்டுள்ளது.
Next Story



