ஏற்காடு மலை பாதையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு சரி செய்யவேண்டும்

X
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், கிளியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்வதற்கு 3 வழிகள் உள்ளன. இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அஸ்தம்பட்டி, அடிவாரம் வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற கோடை விழாவின் போது திடீரென மழை பெய்ததால் 9-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மண் சரிவை சீரமைக்கும் பணி மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். அந்த இடத்தில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 9-வது கொண்டை ஊசி வளைவு குறுகலானது. தற்போது அங்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள், கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஏற்காட்டில் பல இடங்களில் கட்டிட பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் 9-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதாலும், கம்பிகள் சாலை வரை இருப்பதாலும் வாகனங்களை திருப்பி செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் பாரம் தாங்காமல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள இடமும் சேதமாகிறது. பஸ்சில் செல்லும் பயணிகளும் அச்சமடைந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்த அந்த மலை பாதையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்றனர்.
Next Story

