குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றி விட்டு

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி மெயின் ரோடு குளம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும், இக்குளத்தை தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த குளத்தை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நீண்ட தூரம் உள்ள நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மேட்டூர் தண்ணீர் குளத்திற்கு வருவதற்கு முன் குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story

