‘உருது’ பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

X
திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலியாக இருந்த ‘உருது’ பாட ஆசிரியர் பணியிடத்துக்கு ஹாஜிரா என்பவர், 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து கடந்த 2023ம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனக் கூறி, வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அபராதத் தொகையை, நான்கு வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இத்தொகையை, ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்த அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story

