போலி உர மூட்டைகள்: உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

போலி உர மூட்டைகள்:  உரிமையாளர் மீது வழக்குப் பதிவு
X
வழக்குப் பதிவு
தஞ்சாவூரில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 15 டன் உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து சிலரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் பகுதியில் இயற்கை உரம் என்ற பெயரில் டி.ஏ.பி. உரம் விற்கப்பட்டு வந்தது. தகவலறிந்த வேளாண் துறை அலுவலர்கள் சிறுவாச்சூர் பகுதியில் ஜூன் 19 ஆம் தேதி விசாரணை மேற்கொண்டு போலி உர மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த போலி உரங்கள் தஞ்சாவூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்பது தெரிய வந்தது. அங்குள்ள வேளாண் அலுவலர்கள் அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே வடக்கு ஆஜாரம் பகுதியிலுள்ள கிடங்கில் வருவாய்த் துறை, காவல் துறையினர் முன்னிலையில் வேளாண் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை பூட்டை உடைத்து ஆய்வு செய்தனர். இதில், சிமென்ட் சாக்குகளில் போலி உரங்கள் நிரப்பப்பட்டு அடுக்கப்பட்டுள்ளதும், இதுபோல மொத்தம் ஏறத்தாழ 15 டன் போலி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் வேளாண் அலுவலரும், உர ஆய்வாளருமான பி. தினேஷ்வரன் புகார் செய்தார். இதன் பேரில், கிடங்கு உரிமையாளரான தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் தெரு ஹரி பண்டிதர் குளம் சந்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
Next Story