வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், ஆசனூர், தாளவாடி வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.சமீபகாலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானைகள் சத்தி -மைசூர் தேசியநெடுஞ்சாலை ஓரம் வந்து வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடிவருவது தொடர்கதை ஆகிவிடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூர் அருகே அரேபாளையத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் யானைகளுக்கு கரும்பு துண்டுகளை கொடுத்தனர். அதை ருசி பார்த்த யானை அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் ஆர்வம் மிகுதியால் அந்த ஒற்றை அணை அருகே சென்று போட்டி போட்டு தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். ஆபத்தை உணராமல் தொடர்ந்து செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர். இதை பார்த்து மற்ற வாகன ஓட்டிகளும் தங்களது வாகனங்களை சாலையின் நிறுத்திவிட்டு அந்த ஒற்றை யானை அருகே நின்று கொண்டு செல்போனில் படம் எடுப்பதில் குறியாக இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ஒற்றை யானை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் போக்குவரத்து சீரானது.இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆசனூர் அருகே சாலையோரம் நின்ற ஒற்றை யானையை சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் ஆர்வம் மிகுதியால் தங்களது செல்போனில் செல்பி எடுத்து உள்ளனர் இது தவறான செயலாகும். சில சமயம் இது போன்ற செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

