தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் மின்மாற்றியில் உள்ள காப்பர் காயில் திருட்டு

X
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் கடந்த 15 தினங்களுக்கு முன் மின் மாற்றியில் இருந்த காப்பர் காயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து, மின்வாரியத்துறையினர் திருடப்பட்ட மின் மாற்றியிலிருந்த இணைப்புகளை, மற்றொரு மின் மாற்றியில் கூடுதலாக இணைப்பை வழங்கியதால், போதிய மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் கடந்த 15 தினங்களுக்கு முன் காப்பர் காயில் திருட்டு போனது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் மீது இது வரை வழக்கு பதிவு செய்யாததால், மின்மாற்றிக்கு புதிய காப்பர் காயிலை அலுவலர்கள் பெற்று, திருட்டுப் போன இடத்தில் மீண்டும் பொருத்தவில்லை. இதனால், அந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்யும் வேங்கராயன்குடிக்காடு, அதினாம்பட்டு விவசாயிகள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாட்களாக போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் தற்காலிகமாக மற்றொறு மின் மாற்றியிலிருந்து கூடுதலாக இணைப்பை வழங்கினர். ஆனாலும், அந்த மின் மாற்றியில் ஏற்கெனவே பத்து விவசாய மின் இணைப்புகள் உள்ள நிலையில், கூடுதலாக பத்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டதால், குறைந்தழுத்த மின் விநியோகமும், பற்றாக்குறையான மின் விநியோகமும் கிடைப்பதால் முழுமையாக மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மின் மோட்டார்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: 15 நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் மின்மாற்றியிலிருந்த காப்பர் காயிலை திருடிச் சென்றனர். இது குறித்து விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் செய்தனர். உடனடியாக மின்வாரிய அலுவலர்கள் வல்லம் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. வழக்கு பதிவு செய்தால் தான், அதன் அடிப்படையில் புதிய காப்பர் காயிலை பொருத்த முடியும். இதனால், திருட்டு போன மின் மாற்றியிலிருந்து மின்சாரம் பெற்று சாகுபடி செய்த விவசாயிகளின் சோளம், கடலை, நெல் போன்ற பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதையடுத்து மற்றொரு மின்மாற்றியிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதல் மின் இணைப்பால் அங்கும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Next Story

