குமாரபாளையம் நகர மன்ற கூட்டம்

X
Komarapalayam King 24x7 |30 Jun 2025 6:58 PM ISTகுமாரபாளையம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
குமாரபாளையம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாக நகராட்சி கட்டிடத்தில் லாட்டரி விற்பனை கன ஜோராக நடக்கிறது. சட்ட விரோத லாட்டரி விற்பனை, நகராட்சி கடையில் நடத்துவது சரியா? அதனை உடனே அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனிச்சாமி (அ.தி.மு.க.): நமதூரில் விசைத்தறி உள்ளிட்ட தொழில் வளம் சரியில்லாத நிலையில், இது போன்ற லாட்டரி கடைகளால், ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி, குடும்பத்தை கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நகராட்சி துணை தலைவர் பொறுப்பேற்று நான்கு ஆண்டு நடந்து வரும் நிலையில், ஒரு முறையாவது, அவர் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும். கதிரவன் (தி.மு.க.): சுந்தரம் நகர் பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி, உடல் நிலை கெட்டு, பாழாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸ் வசம் சொல்லி போதை பொருட்கள் விற்கும் நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பகுதியில் வரி வசூல் 96.5% ஆகியுள்ளது. இங்கு ஆரம்பிக்கப்பட்ட வடிகால் பணி, பாதியில் நின்று பல மாதங்கள் ஆகிறது. கேட்டால் ஒப்பந்ததாரர் பணம் தரல, என்று சொல்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிந்தராஜ் (தி.மு.க.): குள்ளங்காடு பகுதியில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைக்கு தூய்மைப் பணியாளர்கள் தீ வைத்ததால், அருகில் உள்ள யோகா மையம், வீடு தீப்பற்றி டூவீலர்கள் உள்ளிட்ட பல லட்ச மதிப்பிலான பொருட்கள் சேதமானது. குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றுவது இல்லை. கேட்டால் வண்டி இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் ஓரிடத்தில் குப்பைகளை சேகரித்து, தீ வைப்பதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு, பலரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதனை தடுக்க குப்பை அள்ளும் வண்டிகளை ஏற்பாடு செய்திட வேண்டும். குப்பைகளை கொட்ட இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். தர்மராஜ் ( தி.மு.க.): நமது நகராட்சியில் ஆணையாளர் இல்லை. அந்த இடத்தில் இருந்து நகராட்சியை நிர்வகித்து வந்த தலைமை பொறியாளர் ராஜேந்திரன் இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். கொஞ்ச நாளில் சேர்மனும் இல்லை. அவரும் எம்.எல்.ஏ. சீட்டு வாங்க முயற்சி செய்து வருகிறார். எப்படி தான் நகராட்சியை நிர்வாகம் செய்வது? யார் நிர்வாகம் செய்வது? நாராயண நகர் பகுதியில் பலருக்கு வரியினை, மாற்றி, மாற்றி போட்டு உள்ளார்கள். வீடுகளுக்கு தொழிற்சாலை வரி, தொழிற்சாலைகளுக்கு வீடுகள் வரி என போட்டு உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது உள்ளனர். சரியான வரி நிர்ணயம் செய்திட வேண்டும். விஜய்கண்ணன் (தி.மு.க. நகராட்சி தலைவர்): நகராட்சி துணை தலைவர் தலைமையில் ஒரு முறை நகராட்சி கூட்டம் நடத்த சொல்லி கேட்டீர்கள். அடுத்த ஆண்டு அவரே நகராட்சி தலைவராக வந்து விடுவார். குப்பைகள் கொட்ட இடம் ஏற்பாடு செய்ய சொல்லி சொன்னீர்கள். இடம் உள்ளது. ஆனால் அங்கு செல்ல, வழிதான் இல்லை. அதற்கு, அ.தி.மு.க. கவுன்சிலர் புருசோத்தமன் மனது வைத்தால்தான் உண்டு. எவ்வளவோ நல்ல செயல்களை ஊருக்காக உங்கள் குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்த ஒரு உதவியை செய்தால், நகராட்சிக்கு உதவியாக இருக்கும். நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் லாட்டரி விற்பதாக கூறியது குறித்து, இன்ஸ்பெக்டர் வசம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லலாம். நகராட்சி சார்பில் அந்த கடையை காலி செய்ய நடவடிக்கை எடுக்கலாம். பள்ளி அருகே போதை பொருட்கள் விற்பனை குறித்து போலீஸ் வசம் சொல்லி தடுக்க சொல்லலாம். வெங்கடேசன் (தி.மு.க.): நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் இன்று ஓய்வு பெற உள்ளார். 1983ல் குமாரபாளையம் நகராட்சி வரைவாளராக பணியில் சேர்ந்து, பல இடங்களில் பணியாற்றி, மீண்டும் 1921ல் குமாரபாளையம் நகராட்சி பொறியாளராக பணியில் சேர்ந்து சுமார் 4 ஆண்டு காலம் உழைத்துள்ளார். நிரந்தர ஆணையாளர், நகராட்சி தலைவர் யாரும் இல்லாத நேரங்களில் கூட சிறப்பாக பணியாற்றி நம் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஓய்வு காலம் இனிதாக அமைய அனைவர் சார்பில் வாழ்த்துக்கள். விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர், தி.மு.க.): பொறியாளர் ராஜேந்திரன் வசம், எனக்கு நகராட்சி நிர்வாகம் குறித்து அனுபவம் இல்லாத நிலையில், நான் வந்த புதிதில் ஒவ்வொன்றாக அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவரது ஓய்வு காலம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். ஓய்வு பெற்றாலும், நமது நகராட்சிக்கு உதவி என்றால், போனில் தகவல் சொல்லி உதவி செய்யுங்கள். ராஜேந்திரன் (பொறியாளர்): எனது அலுவல் பணி, குமாரபாளையம் நகராட்சியில் துவங்கி, குமாரபாளையம் நகராட்சியில் நிறைவு பெறுவது மகிழ்ச்சி. இவ்வளவு ஆண்டுகள் எனது உற்ற துணையாக இருந்து ஆதரவு கொடுத்த, சேர்மன், உதவி சேர்மன், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், அனைவருக்கும் எனது நன்றிகள். எந்த உதவி என்னிடம் கேட்டாலும் நான் செய்து தர தயாராக உள்ளேன். இவ்வாறு விவாதங்கள் நடந்தது. அனைவரும் பொறியாளர் ராஜேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
Next Story
