மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிக்கை!

X
NAMAKKAL KING 24X7 B |1 July 2025 7:36 PM ISTதடைசெய்யப்பட்ட அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவு பண்டங்களை வைத்து சாப்பிடக்கூடாது, சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் செயற்கை நிறமிகள், மறுசுழற்சி எண்ணெய் பயன்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அறிவிப்பு.
தினசரி மக்கள் கூடும் உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள்,பேப்பர்கள் மற்றும் நெகிழிகளில் பரிமாறப்படுவது மற்றும் பொட்டலமிடுவது தமிழ்நாடு அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையரகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகளில் மடித்து வழங்கப்படும் உணவுப்பொருட்களினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டி கடைகள், டீக்கடைகள், உணவு விடுதிகளில், வீடுகளில் கூட வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை, அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும். உணவு பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையானது மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும், அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையில் உள்ள கனிம வேதிபொருள்களான அரைல் அமீன்கள் நுரையீரல் மற்றும் சிறுநீர் பை கேன்சரை உருவாக்கும். வண்ணங்கள், தடிமனான எழுத்துக்கள் உருவாக்க மற்றும் விரைவாக உலர்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன், டொலியீன், கோபால்ட் போன்ற வேதி பொருட்கள் செய்தி அச்சு பதிக்க பயன்படுத்தப்படுகிறது. அச்சிடப்பட்ட காகிதங்களும், கார்டு போர்டு அட்டைகளும் மறுசுழற்சியினால் பெறப்படுபவை. ஆகவே அவற்றில் உலோக அசுத்தங்களும் தீங்கு விளைவிக்கக் கூடிய தாலேட் போன்ற வேதி பொருட்களும் கனிம எண்ணெய்களும் காணப்படுவதால் அஜீரண கோளாறை உருவாக்குவதோடு கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பொருட்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானவர்கள், குழந்தைகள், வளரின பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து கேன்சர் போன்ற நோய்கள் வர காரணமாகின்றன. ஆகையால் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அச்சிடப்பட்ட காகிதங்கள் மற்றும் நெகிழிகள் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்வதோ, அச்சிடப்பட்ட காகிதங்களில் எண்ணெய் பிழியவோ, வைத்து உண்ண பயன்படுத்தவோ நாடு முழுவதும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே டீக்கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், எண்ணெய் பலகாரக்கடைகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில், அச்சிடப்பட்ட காகிதங்கள் (செய்திதாள். மையினால் எழுதிய வெள்ளை காகிதம்,பழுப்பு காகிதம்) மற்றும் அது தொடர்பான பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கு வழங்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வழங்கப்படும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் எனவும், சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், சில்லி கடைகள் மற்றும் சமையல் கேட்டரிங் சர்விஸ் உட்பட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் தரச் சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சில்லி கடைகள் மற்றும் உணவகங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் RUCO திட்டத்திற்கு வழங்க வேண்டும். புகார்கள் ஏதும் இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் வாட்ஸப் புகார் எண்.9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story
