பேராவூரணி பேரூராட்சி குப்பை அள்ளும் வாகனம் இயக்கம் பணியாளர்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில், தூய்மைப் பராமரிப்புக்காக வாங்கப்பட்டுள்ள வாகனம் இயக்கி வைக்கப்பட்டது. பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்ற ரூ.30 லட்சத்தில் லாரியும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2 மின்கலம் வாகனமும் வாங்கப்பட்டுள்ளது. இதனை திங்கள்கிழமையன்று பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் முன்னிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். வழியனுப்பு விழா அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அரங்கில் பணி ஓய்வு பெறும் தூய்மைப் பணியாளர் ராக்கு, பணியிட மாறுதலில் செல்லும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி ஆகியோருக்கு வழியனுப்பு விழா பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் முன்னிலை வகித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். நிகழ்வில், பேராவூரணி வர்த்தக கழகத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு, திமுக நகரச் செயலர் என்.எஸ்.சேகர், திமுக முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ், மகாலட்சுமி சதீஷ்குமார் உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



