சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை 
X
ஆயுள் தண்டனை
தஞ்சை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள முன்னையம்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனிஷ்ராஜ் (வயது 50). இவர் கடந்த 29-3-2022 ஆம் தேதி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தனிஷ் ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையை 11-8-2023-ஆம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்த தஞ்சை போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, குற்றம் சாட்டப்பட்ட தனிஷ்ராஜுக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதமும், மேலும் அபராதம் கட்டத் தவறினால் 8 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.
Next Story