அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

X
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர் வடிவேல் மற்றும் யுனைடெட் கிரானைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின்படி 8 பள்ளி வகுப்பறைகள், அதில் 7 ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலக கட்டிடம் உள்பட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விழாவில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசியதாவது, இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், யுனைடெட் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான வடிவேல் முயற்சியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தை பள்ளிக்கு கட்டி கொடுத்துள்ளார். இவரையும், இவரது நிர்வாகத்தினரையும், குடும்பத்தினரையும் பாராட்டி மகிழ்கிறேன். அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர்கள், பெற்றோர் அறிவுரையை ஏற்றுக்கொண்டு மாணவர்களாகிய நீங்கள் நன்கு படித்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இதில் டி.எம்.செல்வகணபதி எம்.பி., மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கலெக்டர் பிருந்தா தேவி, முதன்மை கல்வி அலுவலர் கபீர், கல்வி அலுவலர் பெருமாள், யுனைடெட் கிரானைட்ஸ் செயல் இயக்குனர் வீரேந்திரபிரபு, நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர். முடிவில் காஞ்சனா நன்றி கூறினார்.
Next Story

