அயோத்தியா பட்டினத்தில் தனியார் பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

அயோத்தியா பட்டினத்தில் தனியார் பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
X
கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேலத்தில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் வராமல் உடையாப்பட்டி புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதற்கு எந்த பஸ்களுக்கும் பெர்மிட் கிடையாது. சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்வதற்காக அந்த பஸ்களில் ஏறினால், அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டர் அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் போகாது என கூறி பயணிகளை ஏற்ற மறுத்து கீழே இறக்கி விடுகின்றனர். ஏன் செல்லாது என்று அவர்களிடம் கேட்டால், அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் பல வேகத்தடைகள் உள்ளதாகவும், இதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். பஸ்சில் ஏற்ற மறுப்பதால் பொதுமக்கள் உள்பட பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் வராமல் தனியார் பஸ்கள் செல்வது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பஸ்கள் அயோத்தியாப்பட்டணம் ஊருக்குள் வந்து செல்லும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.
Next Story