சேலத்தில் இருந்து காரை கடத்தி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

X
சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சேலம் ரெயில்வே ஜங்ஷன் கார் பார்க்கிங்கில் சாவியுடன் காரை நிறுத்தி விட்டு அங்கு உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது கார் திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே திருட்டு போன கார் உரிமையாளரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தியதாக இருந்தது. இதையடுத்து அவர், டிரைவர் சரவணனை, செல்போனில் தொடர்பு கொண்டு, சங்ககிரி சுங்கச்சாவடி பகுதிக்கு ஏன் சென்றாய் என்று கேட்டுள்ளார். அப்போதுதான், கார் திருட்டு போனது குறித்து உரிமையாளரிடம் சரவணன் கூறினார். உடனே போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட காரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஏற்கனவே கோவை ஜெயிலில் இருந்து தம்பதியை விசாரணைக்காக போலீசார் சேலம் அழைத்து வந்த நிலையில் அவர்களுக்கு கார் திருட்டு தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சங்ககிரி சுங்கச்சாவடியை கடந்து வந்த காரை பதிவு எண் மூலம் அடையாளம் கண்டு வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அந்த காரை மீட்டு சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். காரை கடத்தி சென்ற நபரையும் போலீசார் பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர், கர்நாடக மாநிலம் பத்ராவதி பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சுஷாந்த் (26) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர், சற்றுமனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், பெங்களூருவில் இருந்து சேலம் வந்த போது சாவியுடன் நின்ற காரை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது.
Next Story

