உசேனாபாத் கிராமத்தில் கால்நடை சுகாதார-விழிப்புணர்வு முகாம் தொடக்கி வைப்பு

X
அரியலூர், ஜூலை 3 - அரியலூர் அடுத்த உசேனாபாத் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.முகாமை, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்து தெரிவித்தது: அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 12 முகாம் என்ற கணக்கில் மொத்தம் 72 முகாம்கள் நடைபெறுகிறது. உசேனாபாத் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கால்நடைகளுக்கான அனைத்து விதமான சிகிச்சைகள், சினைப் பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் மூலம் கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. மேலும், 419 பசுக்களும், 440 வெள்ளாடுகளும், 397 கோழிகளுக்கும் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், மாவட்டத்தில் 1,55,050 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமையும் தொடக்கி வைத்து, மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மின்சாரத்தால் இயங்கும் தீவனப்புல் நறுக்கும் கருவியினை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில், சினை பிடிக்காத மாடுகளுக்கும், கிடேரிக்கன்றுகளுக்கும் தாது கலவைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. 3 கிடேரி கன்றுகள் சிறப்பாக வளர்த்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முகாமுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் கோவிந்தராஜ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பொன்.பாரிவேந்தன், துணை இயக்குநர் முரளிதரன், உதவி இயக்குநர் முருகேசன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

