திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்

X
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவிகள் சுமார் 85 பேர் நேற்று இரவு இந்திய மாணவர்கள் சங்க தலைவர் மோகன் தலைமையில் திடீரென திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கேட் அருகில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். விடுதியில் நிலவும் இட நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும், மின்சாரம், தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் யாஸ்மின் பானு, திருச்சி மேற்கு தாசில்தார் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினோம். அப்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே கலெக்டர் இங்கு வரவேண்டும். அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவிகள் அனைவரையும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு அழைத்து சென்று அமர வைத்தனர். குறைகள் தொடர்பாக மாணவிகளின் பிரதிநிதிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அதனை மாணவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கலெக்டர் எங்களிடம் வந்து பேச வேண்டும் இல்லை என்றால், நாங்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம் என்றார்கள். ஒரே அறையில் 25 பேர் இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி, உதவி கலெக்டர் (பயிற்சி) தீபிசனு ஆகியோரும் வந்து அமர்ந்தனர். அப்போது ஒரு மாணவி எழுந்து 8 பேர் தங்கக்கூடிய அறையில் 25 பேரை அடைத்து வைத்து இருக்கிறார்கள். எங்களால் உட்காரவும், படுக்கவும் முடியவில்லை. அறையில் மின்விசிறி வசதியும் சரியாக இல்லை. பல மின் விசிறிகள் இயங்குவது இல்லை. கழிவறை செல்வதற்கே காலையில் பெரிய போராட்டம் நடத்த வேண்டியது உள்ளது. இந்த நிலையில் புதிதாக அட்மிஷன் போடப்பட்ட பள்ளி மாணவிகள் சிலரையும் எங்கள் விடுதிக்கு தங்குவதற்காக அனுப்பி இருக்கிறார்கள் என தங்களது குறைகளை கொட்டி தீர்த்தார். மேலும் ஒரு மாணவர் மற்றும் மாணவியும் விடுதியில் உள்ள பிரச்சினைகள் பற்றி கூறினார்கள். அதனை பொறுமையாக கேட்ட கலெக்டர் சரவணன் தற்காலிகமாக தங்குவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளை உடனடி யாக சோமரசம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கான போக்குவரத்து ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகமே ஏற்கும் எனவும், நாளை (அதாவது இன்று) மாலை 6 மணிக்கு நானே விடுதிக்கு நேரில் வந்து உங்களை சந்திக்கி றேன் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
Next Story

