ஏற்காட்டில் அரசு ஏகலைவா பள்ளிக்கு புதிய கட்டிடம்

X
ஏற்காட்டில் கடந்த வாரம் அரசு ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியை காரிப்பட்டிக்கு இடம் மாற்றக்கூடாது என்றும், இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக காரிப்பட்டிக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இப்பள்ளி நவீன வசதியுடன் கட்டப் போவதாகவும், அந்த கட்டிடப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் இப்பள்ளி ஏற்காட்டில் இயங்கும் எனவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோர், தற்போது குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதி இல்லாத காரணத்தினாலும், காரிப்பட்டியில் தற்காலிக பள்ளி அமைத்தவுடன் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் கொண்டு விடுவதாகவும் கூறி மாணவ-மாணவிகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைக்கடை பிலியூர் கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 250 மாணவ-மாணவிகள் படிக்கும் வசதியோடு 16 வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், இரண்டு தங்கும் விடுதிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டும் பணிக்கு பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா கலந்து கொண்டு புதிய கட்டிடப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளா, ஏற்காடு தாசில்தார் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

