அரசு ஊழியர் சங்கம் சார்பில் எழுச்சி நாள் கருத்தரங்கம்

சங்க நிர்வாகிகள் உடல் தானம் செய்ய படிவம்
2003 -ம் ஆண்டு, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடிப்பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் ரத்து செய்தார். இதற்கு எதிராக 2003- ம் ஆண்டு ஜுலை மாதம் 2-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது. போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 1.75 லட்சம் ஊழியர்கள் ஒற்றை கையெழுத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். போராட்டம் எழுச்சியாக நடைபெற்றது. ஜெயலலிதா காலத்திலேயே மீண்டும் பறித்த உரிமைகள் மீளப் பெறப்பட்டன. இதனை நினைவுகூறும் விதமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜூலை 2-ம் தேதி எழுச்சி நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைப்பெற்றது. கருத்தரங்கத்திற்கு, மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட். தலைமை வகித்தார். கருத்தரங்க தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ரா.சீனிவாசன் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் த.ஸ்ரீதர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா துவக்கவுரையாற்றினார். இழந்ததும்... மீட்டதும்... எனும் தலைப்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன் எழுச்சி உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் பா.ராணி , அல்போன்ஸ் ராஜ், நாகை மருத்துவ கல்லூரிக்கு தங்களது உடலை தானம் செய்வதற்கான படிவத்தினை, மாநில செயலாளர் சு.வளர்மாலாவிடம் வழங்கினர். 2003-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் சிறை சென்ற, சு.சிவக்குமார், ஏ.டி.அன்பழகன், எம்.கணேசன், எம்.பி.குணசேகரன், ஆர்.மாரிமுத்து, சி.குமரன், எம்.ஹரிகிருஷ்ணன், பி.அருனாச்சலம், வி.பாலசுப்ரமணியன், யு.சண்முகம் (திருவாரூர்) ஆகியோர் பயனாடை அனிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். முன்னாள் மாநில துணைத் தலைவர் சு.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி கூறினார்.
Next Story