திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகிற 18, 19 ஆகிய 2 நாட்கள் நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் ஒரு பகுதியாக, வருகிற 18-ம் தேதி கீழ்வேளூர் கடைவீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, கீழ்வேளூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் ரா.ஜீவானந்தம், கீழ்வேளூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.சிவா, வெண்மணி ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாட்டியக்குடி, வலிவலம், தேவூர், ஆந்தகுடி ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசியதாவது திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மேலும், கோயில் காவலாளி கொலை சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கீழ்வேளூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் துரை.பாஸ்கரன், என்.நடராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆர்.ரவிக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் காத்தமுத்து, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.முருகன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் எஸ்.விக்னேஷ், ஊராட்சி செயலாளர்கள் சிகார் தாமரைச்செல்வன், ஆந்தகுடி சண்முகம், நாகலூர் வைத்தியநாதன்,கிள்ளுகுடி பிரபாகரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மகாலட்சுமி மாதவன், சுமதி ஜெயபிரகாஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என்பதுதான் மக்களுடைய ஒரே கருத்தாக உள்ளது, அது கண்டிப்பாக நிறைவேறும். மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை அகற்றப்படாத காரணத்தால் மேட்டூர் அணையில் எவ்வளவு தண்ணீரை திறந்தாலும் அது கடை மடைக்கு வந்து சேரவில்லை. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து விட்டால், ஜூன் 20 -ம் தேதி தண்ணீர் கடைமடைக்கு வந்து விடும். ஜூலை மாதம் பிறந்தும் தண்ணீர் வராததால், ஆங்காங்கே போராட்டம், மறியல் என கூக்குரல் கேட்கிறது. எடப்பாடியார் வரும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சியளிப்பார்கள். கடலா, மக்கள் தலையா என எண்ணும் அளவிற்கு மக்கள் ஆதரவுகளை தந்து எழுச்சிமிக்க வரவேற்பு தருவார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நான்கு ஆண்டுகளாக, பழைய திட்டங்களுக்கு பழைய பெயரை எடுத்துவிட்டு, புதிது புதிதாக பெயர் வைக்கிறார்கள். கோயில் காவலாளி தனிப்படை காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, இது தேர்தல் நேரம். இது தேர்தலில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும். திமுக மீது கடுமையாக கோபத்தை ஏற்படுத்தும் என அஞ்சி பயந்து நடுங்கி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story



