பேராவூரணி அருகே ரெட்கிராஸ் சங்கம் சார்பில் பயிற்சி முகாம் 

பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மனோரா சமூக கூடத்தில் இந்தியன் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை, மனோரா கிளைகள் சார்பில், இலவச மாற்றுமுறை மருத்துவ விழிப்புணர்வு பயிற்சி முகாம், முதலுதவி வழிமுறைகள், பேரிடர் மேலாண்மை தகவல் தொடர்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், நான் இரண்டு முறை பேரூராட்சி தலைவராக பணியாற்றி,, பின்னர் சட்டமன்ற உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறேன். எனக்கான பயிற்சியை ரெட்கிராஸ் அமைப்பிடமிருந்து தான், அதன் பேராவூரணி பகுதி தலைவராக இருந்த போது நான் கற்றுக் கொண்டேன். ரத்த தானம் செய்வதிலும், துயரங்கள், இயற்கை பேரிடர், போர்முனைகளிலும் தன்னலமின்றி பணியாற்றி வருவது ரெட்கிராஸ் அமைப்பு தான். இங்கு பங்கேற்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் ரெட்கிராஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றுவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கான தலைமைப் பண்பையும், சேவை மனப்பான்மையையும் ரெட்கிராஸ் அமைப்பில் இணைந்து பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். இதில், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜலீலாபேகம் முகமது அலி ஜின்னா, ரெட்கிராஸ் செயலாளர் நீலகண்டன், கடற்படை அலுவலர் குகானந்தம், சோகோ தகவல் தொழில்நுட்ப நிறுவன சிஇஓ எஸ்.சசிகுமார், ரெட்கிராஸ் பட்டுக்கோட்டை தலைவர் டி.சுவாமிநாதன், செயலாளர் சிவ.நாடிமுத்து, டாக்டர் பொன்.அண்ணாதுரை, திருவிடைமருதூர் ரெட்கிராஸ் சங்கம் தலைவர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், பாலசண்முகம், பயிற்சியாளர் துரை.மாணிக்கம், தென்னங்குடி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் இயற்கை பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளித்தல், ஹாம் ரேடியோ பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story