ஓரணியில் தமிழ்நாடு வீடு வீடாக சென்று மக்களை சந்தித்த கனிமொழி
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக தலைவரும், முதலைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர் களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இதன் ஒரு பகுதியாக, தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னிக்கோனேந்தல் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தினர். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்து, திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மக்கள் அடைந்த நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், திமுகவிற்குத் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். தொடர்ந்து, மக்களிடம் திமுகவில் இணைய விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டறிந்து, விருப்பம் தெரிவித்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையைக் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் ஒட்டினர். இந்த நிகழ்வில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ. ராஜா., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story



