கொலையில் கைதான மாணவர்கள் இல்லத்தில் அடைப்பு

X
ஈரோடு குமலன்குட்டை , செல்வம் நகரை சேர்ந்தவர் சிவா.தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதித்யா (17), என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இதில் ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஆதித்யா பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் பள்ளி அருகே உள்ள ஒரு பகுதியில் சாதாரண சீருடையில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆதித்யா பெற்றோர் தகவல் அறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போதும் மகனின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். இந்நிலையில் நேற்று காலை வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு ஆதித்யாவின் பெற்றோர். உறவினர்கள் திரண்டு வந்தனர். தனது மகனை சக மாணவர்கள் அடித்து கொலை செய்துள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் என ஆதித்யா பெற்றோர் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமாரனிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுவரை உடலை வாங்க மாட்டோம். இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என ஆதித்யா பெற்றோர் மிரட்டல் விடுத்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி புகார் மனுவாக எழுதிக் கொடுங்கள் என்று கூறினர். இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆதித்யாவை 2 மாணவர்கள் தாக்கியதால் அவர் இறந்தது தெரியவந்தது. ஆதித்யாவிடம் அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தங்களது வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் பேசக்கூடாது என மிரட்டி தகராறு ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்கள் தான் சம்பவத்தன்று பள்ளி அருகே ஆதித்யாவை இது தொடர்பாக தாக்கியுள்ளனர். இதில் ஆதித்தியா மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த இரண்டு மாணவர்களும் அருகில் கடையில் இருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து ஆதித்யா மீது ஊற்றியுள்ளனர். ஆனாலும் ஆதித்யா கண் திறக்காததால் அந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆதித்யாவை அடித்த அந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த இரண்டு மாணவர்களுக்கும் 17 வயது தான் ஆகிறது. இதை எடுத்து அந்த மாணவர்களை இளம் சிறார் நீதி குடும்பம் முன்பு ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி அந்த இரண்டு மாணவர்களையும் கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த இரண்டு மாணவர்களும் கோவைஉள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நேற்று அந்த மாணவன் படித்த பள்ளியில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பாசிரியர் மாணவன் கொலை தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றதால் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் சென்று விசாரணை நடத்த உள்ளார். ஆதித்யா பள்ளிக்கு வராதது என்பது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என பள்ளியின் மீது அவர்களது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
Next Story

