கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

X
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15வது நிதிக்குழு மானியம் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ், குடிநீர் திட்டப்பணிகள், வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் உட்கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேம்பலாபாத் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும், திருக்களூர் ஊராட்சி, பால்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 02 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் வாயிலாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் உள்ள நல்லூரில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் ஆய்வு செய்து, ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சிவராஜன், உதவி பொறியாளர் சிவசந்திரன், வெள்ளப்பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story

