ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக் கூறி வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல்.
அமைதி பேச்சு வார்த்தையின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக் கூறி வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வெண்பாவூர் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி கொடுக்கப்பட்ட பொதுநல மனுவின் அடிப்படையில், கடந்த 19.05.2025 அன்று வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அலுவலர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவ்வாறு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருக்கும் நபர்களின் வீடுகள் நிரந்தர அமைப்பு கட்டடங்கள் ஆகும். எனவே வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள திண்ணை, தாழ்வாரம், வாயிற் படி, சிறிய அறைகள், மற்றும் கழிவறைகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருக்கும் நபர்களின் வீட்டிற்கு நிலத்தின் வகைப்பாடு மாற்றி இலவச வீட்டு மனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று மேல குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக வருவாய்த்துறையினர் சென்றுள்ளதாகவும், 19.05.2025 அன்று நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனவும் கூறி அந்த ஊர் கிராம பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று (05.07.2025) பெரம்பலூர் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பரபரப்பாக இயங்கக் கூடும் வருவாய் வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story



