அரசியல் பாடத்தை விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் : அமைச்சர் கோவி.செழியன்

X
மூத்த தலைவரை விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவர் இன்னும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை உணர்த்துகிறது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதையம்மன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். சந்தித்த வீடுகளில் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் உறுப்பினர்களாகவும் பதிவு செய்துள்ளோம். செல்லுமிடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மீது நம்பிக்கையால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக 300 மடங்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இது முதல்வருக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி இப்பயணத்தைத் தொடர்கிறோம். பொதுமக்களைப் பொருத்தவரை அரசு ஊழியர்கள், திராவிட, தமிழ்ப் பற்றாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் நேரடியாக திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஆனால், கருணாநிதி தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்கு, மாநில உரிமைக்கு முதல்வர் எடுத்துக் கொள்கிற நடவடிக்கை, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு செய்கிற வஞ்சனை போன்றவற்றால் எங்களை ஆதரிக்கின்றனர். இவர்களில் பலர் உறுப்பினர்களாகச் சேருகின்றனர். இதுதான் இப்பயணத்தின் வெற்றி. குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியலை தொடங்கிய விஜய் தேர்தல் களம் வந்தபோதெல்லாம், அதில் போட்டியிடாமல் விலகி நின்று, நேரடியாக முதல்வர் நாற்காலிதான் என்ற எண்ணம் உள்ளவர். இவர் பரந்தூர் பிரச்னையை கூறி முதல்வர் ஏன் வரவில்லை என கேட்கிறார்? கடந்த முறை விஜய் பரந்தூர் சென்றபோது கேரவன் வேனிலேயே உட்கார்ந்திருந்ததாகவும், இறங்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளைக் கூறினர். எனவே, இமயமலை மீது குற்றம் சொல்வதற்கு குறைந்தபட்சம் உயரம் இருக்க வேண்டும். அது இல்லாத நிலையில் உள்ள அவர் அரசியலில் ஒரு கத்துக்குட்டி. மூத்த தலைவர் இப்படி, அப்படி செய்ய வேண்டும் என்கிற பேச்சு எல்லாம், அவர் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவே நாங்கள் உணருகிறோம். அவருடைய மதிப்பீடு தவறு. தமிழக முதல்வர் அனைத்து நிலைகளையும் உணர்ந்தவர். எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஒன்றிய அரசின் இடர்பாட்டை மீட்டு, தமிழகத்தை இவ்வளவு வெற்றிப் பாதையில் எடுத்துச் செல்கிற தமிழக முதல்வரின் பணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். அது வருகிற 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்" என்றார் அமைச்சர். அப்போது, திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர் டி. புண்ணியமூர்த்தி, திமுக தலைமைக் கழக உறுப்பினர் து.செல்வம், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் துரை.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

