பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், திருச்சிற்றம்பலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து விரிவாக்க மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்தினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு பயறு வகை விதைகள், காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக, பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி துவக்க விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில் “இத்திட்டத்தின் கீழ் மரத்துவரை விதை, அவரைவிதை , தட்டைப்பயறு விதைகள் அடங்கிய 25 கிராம் அடங்கிய பயறுவகை தொகுப்பு, பப்பாளி, எலுமிச்சை, கொய்யா பழச்செடிகள் அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு தக்காளி, வெண்டை, கொத்தவரை, கத்தரிக்காய், விதைகள் அடங்கிய காய்கறி விதைத் தொகுப்பு 100சத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய தொகுப்பை தேர்வு செய்து ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு தொடர்பான இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார். துணை வேளாண் விரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்துவக்க விழாவில், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், டாக்டர் சௌந்தர்ராஜன், பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயராமன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய பிரதிகள் பங்கு கொண்டனர். சேதுபாவாசத்திரம் இதேபோல், சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பயறுவகைகள், காய்கறி விதைகள், பழக்கன்று தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story



