ஏரிக்கு கிளை வாய்க்கால் உருவாக்க கோரி ஏரியில் இறங்கி போராட்டம்

போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாலையப்பட்டியில் உள்ள ஏரிக்கு கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும் அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தடுப்பணையில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பாலையப்பட்டி கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில், பல்வேறு நீர் நிலைகளும் வறண்டு கிடக்கும் சூழ்நிலையே உள்ளது. கடந்த ஜீன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. குறிப்பாக பாலையப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை கொள்ளிடத்தில் உபரி‌ நீர் திறந்து விடுபட்டு கடலில் வீணாக கலக்கிறது. ஆனால் கல்லணையில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள எங்கள் பகுதி வறண்ட நிலை காணப்படுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்க பிரதிநிதி வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாலையப்பட்டி தடுப்பணையில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும். குடி தண்ணீர் மற்றும் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் விவசாய சங்க பிரதிநிதி ஜீவக்குமார் கூறுகையில், கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் தற்போது பல பகுதிகளிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் செங்கிப்பட்டி, பாலையப்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் ஏராளமான ஏரிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் வறண்டு போய்தான் உள்ளது. கல்லணைக்கு அருகில் ஒரு பாலைவனம் போல் பாலையப்பட்டி உள்ளது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால்களை உருவாக்க வேண்டும். அல்லது நீர் இறைப்பு பாசன திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். வானம் பார்த்த ஏரியாக இப்பகுதி ஏரிகள் அனைத்தும் மாறுவதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி விவசாயத்தை செழிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story