உத்திரமேரூரில் காட்டு பன்றிகளால் நாசமான கரும்பு பயிர்கள்

X
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர், அரும்புலியூர், ஆத்தங்கரை, குருமஞ்சேரி, களியப்பேட்டை, கரும்பாக்கம், காவூர், காவாந்தண்டலம், ராஜம்பேட்டை, திருவானைக்கோவில், விச்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் விவசாயிகள் அதிக அளவு கரும்பு பயிரிடுகின்றனர். இப்பகுதிகளில் பயிரிடும் கரும்புகளை, அறுவடைக்கு பின், மதுராந்தகம் அடுத்த, படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அரவைக்கு அனுப்புகின்றனர். இதனால், சீட்டணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்கள், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முக்கிய கரும்பு மண்டலமாக திகழ்கிறது. படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஆண்டுதோறும் அரவை செய்யப்படும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலம் வாயிலாக உற்பத்தி செய்கின்ற கரும்புகளாக உள்ளன. கரும்பில் இருந்து மாற்று பயிர் சாகுபடிக்கு காரணமாக ஆட்கள் தட்டுப்பாடு, கட்டுப்படியாகாத விலை போன்றவற்றை கூறிவந்த நிலையில் தற்போது அவைகளை தாண்டி காட்டுப் பன்றி தொந்தரவு முக்கிய காரணியாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், இங்குள்ள சாத்தணஞ்சேரியில் மட்டும் 1.000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்ட நிலையில், இந்த ஆண்டு சீட்டணஞ்சேரி கரும்பு மண்டலத்தில் மொத்தமாக 300 ஏக்கரில் மட்டும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது பாதி வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் கரும்பு தோட்டத்திற்குள் கூட்டமாக புகுந்திடும் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. கரும்பு தோட்டங்களில் காட்டு பன்றிகளால் நாசமான கரும்புகளை அப்பகுதி விவசாயிகள் ஆட்களை வைத்து அகற்றி வருகின்றனர். இதுகுறித்து, கடந்த 23ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக, உத்திரமேரூர் வனச்சரக அலுவலர்கள், சீட்டணஞ்சேரியில் காட்டுப் பன்றிகளால் சேதமான கரும்பு தோட்டங்களை ஆய்வு செய்தனர். அப்போது, கரும்பு விவசாயிகள் தங்களது பிரச்னைகள் குறித்து அவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
Next Story

