தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாடு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்தக் கோரிக்கை

X
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தஞ்சை மாவட்ட 5 ஆவது மாநாடு, சாதி மறுப்பாளர்கள் சங்கமம், தஞ்சை சரோஜ் நினைவகம், உமாநாத் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் கே.முனியாண்டி வரவேற்றார். மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் பி.சத்தியநாதன் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் துவக்க உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டக் குழு தஞ்சை மண்ணில் தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். தமிழ் சமூகத்தில், தமிழ் மண்ணில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் சாதியை ஒழித்து விட முடியாது. களத்தில் எல்லா சமூகத்தினரும் இறங்கி போராடினால் தான் வெற்றி பெற முடியும். இந்த அமைப்பில் எல்லா சமூகத்தினரும் இருப்பது பாராட்டத்தக்கது. சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளை கடந்த பின்பும் தீண்டாமை இன்னும் முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை. சில மாற்றங்கள் வேண்டுமானால் வந்திருக்கலாம். தமிழகத்தில் தொட்டால் தீட்டு என்ற நிலை இருந்தது, ஆனால் கேரளாவிலே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்த்தாலே தீட்டு என்ற நிலை இருந்தது. நம்பூதிரி சமூகத்தின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த போது, அதே சமுதாயத்தில் பிறந்த தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தீண்டாமைக்கு எதிராக போராடி வெற்றி கண்டார். கேரளத்தில் உருவாக்கிய மாற்றத்தை ஏன் தமிழகத்திலே கொண்டு வர முடியவில்லை வைக்கத்தில் அழைப்பின் பேரில் சென்று தீண்டாமைக்கு எதிராக பெரியார் போராடினார். வெண்மணியில் 44 உயிர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் பலியான போது தடுக்க திராவிட இயக்க தலைவர்கள் ஏன் செல்லவில்லை. பேசுவது என்பது எளிது. செயல்படுவது தான் சிரமம். திருபுவனம் அஜித் குமார் பிரச்சனையில் முதலில் சென்று புகார் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான். பிரச்சனையை வெளிக்கொண்டு வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் இன்றைக்கு யார், யாரோ உரிமை கொண்டாடி பலன் அடைகின்றனர். நாம் செய்த செயல்களை நாம் வெளிப்படுத்துவதில்லை. தஞ்சை மாவட்டத்தில் இன்றைக்கும் இரட்டைக் குவளை முறை உள்ளது. 36 சதவீத முடி திருத்தும் கடைகளுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாது. 70 சதவீதம் பட்டியல் இன மக்களுக்கு சொந்தமாக நிலம் கிடையாது. 60 சதவீத பட்டியல் இன மக்கள் சாதி ஆதிக்க சக்தியினரின் வீடுகளுக்குள் செல்ல அனுமதி இல்லை. தஞ்சையில் பல சமூகத் தலைவர்களின் சிலைகள் உள்ளது. ஆனால் அம்பேத்கருக்கு இதுவரை சிலை இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி அம்பேத்கர் சிலை வைக்கும் போராட்டத்தை நடத்துவோம். பட்டியல் இன மக்களுக்கு வாழ்க்கையே போராட்டம் தான், பொழுது விடிந்து, பொழுது சாயும் வரை ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் தான். அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். தஞ்சையில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிந்து விடவில்லை. அதற்கு எதிராக நாம் வலுவாக போராட வேண்டும். திராவிட இயக்கங்கள் வாக்குக்காக தலித் தலைவர்களை உருவாக்கி வருகின்றன. ஆனால் தீண்டாமையை ஒழிக்க முன்வரவில்லை. சட்டமன்றத்திலே நாம் குரல் எழுப்பி, ஆதிதிராவிடர் நல ஆணையம் வந்தது. ஆனால் அதற்காக முதல்வரிடம் நன்றி சொல்லி மற்றவர்கள் பேர் வாங்கி செல்கின்றனர். காலனி வீடுகள் கட்ட ரூ.6 லட்சம் தரவேண்டும் என்று சட்டமன்றத்தில் கேட்டபோது சோபப்படுகிறார்கள். ஆனால் கேரளத்தில் சிபிஎம் ஆட்சியிலே தொகுப்பு வீடு கட்ட ரூபாய் 10 லட்சம கொடுக்கிறார்கள். இதை நாம் அனைத்து இடங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். மேடையில் சமூக நீதி பேசுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் ஒதுங்கி செல்கிறார்கள். பாஜக அரசாங்கம் சாதி வாரி கணக்கெடுப்பை நடந்த தயக்கம் காட்டுகின்றனர். 78 ஆண்டுகள் கடந்தும் சமூக நீதி நிலை நாட்டப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் அதற்காக துரும்பை கூட எடுத்துப் போடவில்லை. சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்ற சமூக நீதிப் போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றென்றும் முன்னெடுக்கும்" இவ்வாறு அவர் பேசினார். பங்கேற்றோர் சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் மற்றும் தோழமை சங்க மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வாசு (விவசாயத் தொழிலாளர் சங்கம்), துரை.ஏசு ராஜா (வாலிபர் சங்கம்), கே.ஹரிஷ் (மாணவர் சங்கம்), பி.எம்.இளங்கோவன் (மாற்றுத் திறனாளிகள் சங்கம்), ஆர்.விஜயகுமார் (தமுஎகச), என்.குருசாமி (தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு), எம்.கே.சேகர் (வழக்கறிஞர் சங்கம்) மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆர்.புண்ணியமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்.தமிழ்மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.அபிமன்னன், எஸ்.செல்வராஜ், பழ.அன்புமணி, எம்.அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டக் குழு உறுப்பினர் வீ.கரிகாலன் நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்ட மாநாட்டில் 39 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் தலைவராக கே.பன்னீர்செல்வம், மாவட்டப் பொருளாளராக பி.சத்தியநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தமுஎகச சா.ஜீவபாரதி உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். காலனி, தெருக்களில் சாதியை அடையாளப்படுத்தும், சாதிப்பெயர்களை நீக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத பட்டியல் இன, பழங்குடியினர் இன மக்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனைகளை வழங்க வேண்டும். தஞ்சாவூர் நகரத்தில், அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவச் சிலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையத்தை ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்திலும் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில்களில் பட்டியல் இன, பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பூதலூர் தாலுகா வளம்பக்குடி கிராமத்தில் உள்ள 18 பட்டி கிராமத்திற்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தவும், இக்கோவிலில், பள்ளர் என்கிற தேவேந்திர குல வேளாளர், பறையர், அருந்ததியர் ஆகிய சாதிகளுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், அறங்காவலர்கள் குழுவில் சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

