சொத்து தகராறு: தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது

X
தஞ்சாவூரில் சொத்து தகராறில் தம்பியைக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனைக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அறிவழகன் (46). கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழும் இவருடன், திருமணமாகாத இவரது தம்பி திருவேங்கடம் (41) வசித்து வந்தார். இருவருக்கும் இடையே குடும்பச் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், குடும்பச் சொத்து தொடர்பான கடைகளில் வசூலிக்கப்பட்ட வாடகையைத் தனக்கு கொடுக்கவில்லை என திருவேங்கடத்திடம் அறிவழகன் ஞாயிற்றுக்கிழமை இரவு கேட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திருவேங்கடத்தை அறிவழகன் கட்டையால் தாக்கினார். இதனால், பலத்த காயமடைந்த திருவேங்கடம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அறிவழகனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
Next Story

