"உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

X
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் உத்தரவின்படி, மக்களின் குறைகளை தீர்க்க “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தில் நகர்ப்புறங்களில் 45 முகாம்கள், கிராமப் புறங்களில் 75 முகாம்கள் ஆக மொத்தம் 120 முகாம்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறவுள்ளது. நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இம்முகாமில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக ஒவ்வொரு முகாம் நடைபெறும் இடத்திலும் தனியே நான்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு விண்ணப்பத்தினை பெற்று குடும்ப அட்டை எண், ஆதார் எண் , வங்கிக்கணக்கு எண், IFSC Code, ஆகியவற்றை சரியாக பூர்த்தி செய்து அதன் அசலினை காண்பிக்க வேண்டும். “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தில், குடும்பத்தில் எவரேனும் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்தாலும் அந்த குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள் இருந்தால் விண்ணப்பிக்கலாம். அரசு மானியத்துடன் கார், ட்ராக்டர் வாங்கியுள்ள குடும்பத்தில் தகுதியுடைய பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற முகாமில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்கள் குறித்து நகர்ப்புற, கிராமப்புற அமைப்புகளின் மூலம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் 06.07.2025 முதல் வீடுதோறும் சென்று திட்டத்தினை விளக்கி வீட்டிற்கு ஒரு துண்டுப்பிரசுரம் மற்றும் ஒரு விண்ணப்பம் மட்டுமே கொடுப்பார்கள். பொது மக்கள் தங்களது கோரிக்கையை வழங்கப்பட்ட விண்ணப்பத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தை முகாம் நடைபெறும் நாளன்று சென்று கொடுத்து ஒப்புகைசீட்டு பெற்றுக்கொள்ளலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 45 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

