நகராட்சி ஆணையர், பொறியாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |9 July 2025 10:21 PM ISTகுமாரபாளையத்தில் நகராட்சி ஆணையர், பொறியாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் நகராட்சியில் ஆணையாளராக தற்காலிகமாக திருச்செங்கோடு, ராசிபுரம் என பல்வேறு நகராட்சியிலிருந்து ஆணையர் வந்து கொண்டிருந்தனர். தற்போது சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து நித்யா என்பவர் பொறுப்பு ஆணையராக வந்து கொண்டுள்ளார். 33 வார்டுகள், ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள், பெருமளவிலான குடியிருப்பு பகுதிகள் உள்ள குமாரபாளையம் நகராட்சியில் பல மாதங்களாக நிரந்தர ஆணையர் இல்லாமல், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பணிகளை நிர்வகித்து வந்தார். தற்போது ஜூன் மாத இறுதியில் அவரும் பணி ஓய்வு பெற்றார். குடிநீர் விநியோகம், குடிநீர் மேல்நிலைதொட்டி அமைத்தல், வடிகால் அமைத்தல், வரி வசூல் பணிகள் கவனித்தல், அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்களில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று, நகரின் வளர்ச்சி குறித்து எடுத்து கூறுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள், நிரந்தர ஆணையாளர், பொறியாளர் இல்லாமல் கேள்விக்குறியாகி உள்ளது. எம்.ஜி.ஆர். நகர் அருகில் உள்ள சீனிப்பிள்ளைகாடு, அன்னை நகரில் வடிகால் அமைக்கும் பணி, நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இது போல் நகரில் உள்ள 33 வார்டுகளில் பல இடங்களில் பல பணிகள் நிலுவையில் உள்ளது. நகராட்சி வளர்ச்சியை கருத்தில்கொண்டு, விரைவில் நிரந்தர ஆணையாளர், பொறியாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
