ராமநாதபுரம் உலக நன்மை வேண்டி பிரார்த்தனை
ராமநாதபுரம் உலக நன்மை வேண்டி ராமேஸ்வரத்தில் சுதர்சன ஹோமம் நடத்திய ஜப்பான் டோக்கியோவை சேர்ந்த பக்தர்கள் பின் ராமநாதனை மனமுருகி பிரார்த்தனை செய்தனர். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் சித்த வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டு; வெளிநாட்டு பக்தர்கள் இந்தியாவில் உள்ள பாரம்பரிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகளவு வெளிநாடுகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர். அதன் அடிப்படையில் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் சித்த வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியில் இருந்து பால கும்ப குருமணி என்பவர் தலைமையில் 23 ஜப்பான் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். பின்னர் உலக நன்மை வேண்டி ஹோமம் நடத்தி சுவாமி தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம் வந்திருந்த ஜப்பான் பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்த கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பின் கிழக்கு ராஜகோபுரம் நுழைவு வாயில் அருகே உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் மண்டபத்தில் உலக நன்மை வேண்டி சுதர்சன ஹோமம் நடத்தினர். பின்னர் ஐந்து கலசங்களில் எடுக்கப்பட்ட புனித நீரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு கொண்டு வந்து அதை ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர். ஜப்பானில் இருந்து சுழற்சி முறையில் வந்துள்ள 120 பக்தர்கள் தமிழக மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட கோவில்களில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாக ஜப்பான் பக்தர் குழு தலைவர் தெரிவித்தார். ராமேஸ்வரம் வந்திருந்த ஜப்பான் பக்தர்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டு மூன்றாம் பிரகாரத்தில் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story






