ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் மனு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம் கிராமத்தில் சர்வே எண் 128/2 அமைந்துள்ள ஸ்ரீ பட்டிணம் காத்தார் என்ற சாத்த அய்யனார் கோவில் எங்களது குலதெய்வ கோவில் ஆகும்.மேற்படி கோவிலானது பல தலைமுறைகளாக அமைந்துள்ளது.இக்கோவிலானது சுமார் 500-க்கும் மேலான குடும்பங்களுக்கும் குலதெய்வ கோவிலாகும்.ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் அன்று பல ஊர்களில் இருக்கும் இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்து பங்குனி உத்திரத் திருவிழாவினை நடத்தி செல்வது வழக்கம்.அது போன்றே சிவராத்திரி திருவிழாவும் கொண்டாடுவது வழக்கம்.கோவில் அமைந்துள்ள சர்வே எண் 128/2 ஆனது மொத்தம் 2.90 ஏக்கராகவும்,அதில் நடுப்பகுதியில் கோவில் மற்றும் அதனை சார்ந்த பீடமும் உள்ளது.மற்ற பகுதிகள் அனைத்தும் காலியிடமாக உள்ளது.ஆரம்பத்தில் மேற்படி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் எவ்வித ஆக்கிரமிப்புகளும் இன்றி காலி இடமாக இருந்தது.ஆனால் நாளடைவில் பல்வேறு நபர்கள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தினை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தனர்.இது சம்பந்தமாக கோவில் நிலத்தினை சுற்றி வேலி அமைக்கும் பொருட்டு கோவில் நிர்வாகம் சார்பாக நாங்கள் மனு அளித்து அதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,உயர்நீதிமன்ற மதுரை கிளையில் WP(MO) 20558/2021 எண்ணில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவில் சர்வே எண் 10/2 உள்ள இடமானது சாத்தப்பன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் எனவும் அதனால் கோவில் அமைந்துள்ள இடத்தில் எல்கையை அளந்து காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டு அளவீடு செய்து கொண்டு இருந்தபோது இடத்தினை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்ட நபர்கள் ஆட்சேபனை செய்து அளவிடும் பணிகளை நிறுத்திவிட்டனர்.அதன் பின்னர் மீண்டும் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அளவிடும் பணிகளை செய்ய நாங்கள் கேட்டுக் கொண்டும் இதுவரை அளவிடும் பணிகள் செய்து தரப்படவில்லை.மேலும் சர்வே அறிக்கை எங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.மேலும் உயர்நீதிமன்றத்தால் சர்வே எண் 128/2 அமைந்துள்ள இடமானது எங்களது கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடம் என தெளிவாக உத்தரவிடப்பட்ட பிறகும் கூட இதுவரை பட்டா கோவிலின் பெயரில் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா மற்றும் சிவராத்திரி திருவிழா மற்றும் பிற நல்ல நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் கோவிலுக்குட்பட்ட வாரிசுதாரர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு செல்வார்கள்.அப்போது கோவிலில் முடி எடுத்தல்,காது குத்து,கிடா வெட்டுதல் மற்றும் பொங்கல் இடுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு செல்வர்.பங்குனி உத்திரம் மற்றும் சிவராத்திரி திருவிழாவின் போது எங்கள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பங்களை சேர்ந்த நபர்கள் 1000 நபர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள்.அவர்கள் வரும்போது அன்றாடம் கோவிலின் தினசரி தேவைகளுக்கு போதிய தண்ணீர் வசதி மற்றும் வரும் நபர்கள் ஓய்வு எடுப்பதற்கு தேவையான நிழற்குடை வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது.கோவிலுக்கு ஏற்கனவே மின் இணைப்பு வசதி மின் இணைப்பு எண்:0535550006 கோவிலின் பெயரில் உள்ளது.இந்நிலையில் கடந்த 23.06.2023,அன்று வருவாய் அலுவலர்கள் வந்து கோவில் நிலத்தை அளந்து காண்பித்தனர்.அவர்கள் குறித்து கொடுத்த அளவுகளின் அடிப்படையில் நாங்கள் எங்கள் கோவில் பாதுகாப்பிற்காக கல் ஊன்றி கம்பி வேலி அமைத்தோம்.அந்த சமயத்தில் வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த உமையணன்,ரமேஷ் முத்து,ரஹ்மத்துல்லா ஆகியோர் தலைமையில் சுமார் 30 நபர்களுக்கு மேல் அங்கு வந்து நாங்கள் போட்டிருந்த வேலியை உடைத்து சேதப்படுத்தியதோடு மேற்கொண்டு வேலி அமைத்தால் எங்களை கொன்றுவிடுவதாக மிரட்டி சென்றனர். மேலும் கோவில் இடம் வேலி அமைக்காமல் திறந்த வெளியாக இருப்பதால் கோவில் பாதுகாப்பிற்காக திருக்கோவில் நிர்வாகம் நியமித்த குடும்ப நபர்களை அந்த நபர்கள் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக வாலிநோக்கம் காவல் நிலையத்தில் அன்றே புகார் கொடுக்கப்பட்டது. எனவே இடையில் நிறுத்தப்பட்ட அளவிடும் பணிகளை நிறைவு செய்யவும்,வரும் 11.7.2025 அன்று கோவிலை சுற்றி பாதுகாப்பிற்கு கல் ஊன்றி,வேலி அமைக்கவும்,கோவிலுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்ளவும் கோவில் பாதுகாப்பிற்காக திருக்கோவில் நிர்வாகம் நியமித்த குடும்ப நபர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன்,நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளைகள் சேர்மன் ரமேஷ் கண்ணன் உட்பட கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஏராளமான கிராம மக்கள் உடனிருந்தனர்.
Next Story



