ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

X
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 26ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது : ஈரோடு மாவட்டத்தில் 2025 - 26 ஆம் நிதியாண்டில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், பெருந்துறை சாலை, கூரபாளையம் பிரிவு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 26ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமினை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்த உள்ளன. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இம்முகாமில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்க உள்ளார்கள். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் பயின்றவர்கள் பங்கு பெறலாம். இம்முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு குறித்த வழிகாட்டுதல்கள், இலவச திறன் பயிற்சிக்கான பதிவுகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் படித்த இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்று தங்கள் தகுதிகளை மேம்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இம்முகாம் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஈரோடு மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றிட வழிகாட்டிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு, கோவை) ஜோதிமணி, உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) சாந்தி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டர்.
Next Story

