அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு
X
ஈரோடு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். ஈரோடு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முகாம்கள் வரும் 15ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் மாநகராட்சியில் 40 முகாம்கள், நகராட்சியில் 41 முகாம்கள், பேரூராட்சியில் 84 முகாம்கள் மற்றும் ஊராட்சிகளில் 175 முகாம்கள் என மொத்தம் 340 முகாம்கள் நடைபெற உள்ளது. குறிப்பாக, வரும் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, மாநகராட்சியில் 15 முகாம்கள், நகராட்சியில் 15 முகாம்கள், பேரூராட்சியில் 30 முகாம்கள் மற்றும் ஊராட்சியில் 54 முகாம்கள் என மொத்தம் 114 முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளது. ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் அருகேயுள்ள பிளாட்டினம் மஹால், பவானியில் உள்ள வன்னியர் திருமண மண்டபம், அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள சமுதாயக்கூடம், கிளாம்பாடி அடுத்த கருமாண்டாம்பாளையம் கொங்கு திருமண மண்டபம், பட்லூர் அடுத்த பொம்மன்பட்டி சமுதாய கூடம், மொடச்சூர் அடுத்த வேட்டைக்காரன் கோவில் ஸ்ரீ வாசு சென்னியப்பா திருமண மண்டபம் ஆகிய இடங்களில், வரும் 15ம் தேதி முகாம்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் சுமார் 1,117 தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அம்முகாமையொட்டி, பிளாட்டினம் மஹாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, மாவட்ட எஸ்பி சுஜாதா, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாநகராட்சி பொறியாளர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாநகர நல அலுவலர் மருத்துவர் கார்த்திகேயன், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், 1- வது மண்டலகுழு தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் ஜெகதீஷ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story