வாலாஜாபாத் பாலாற்றில் கோரை புற்கள் தீப்பிடிப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பாலாற்று படுகையின் பெரும்பாலான இடங்களில் கோரை புற்கள் அதிக அளவில் வளர்ந்து படர்ந்துள்ளன. தற்போது கோடைக்காலத்தை தொடர்ந்து அந்த கோரை புற்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், நேற்று, பிற்பகல் 12:00 மணிக்கு, வாலாஜாபாத் - வெண்குடி இடையிலான பாலாற்று படுகையில் மர்ம நபர்கள் செயலால் கோரை புற்கள் தீப்பிடித்து எரிய துவங்கின. அப்பகுதியில் மது பிரியர்கள் மது அருந்தியபோது சிகரெட் போன்ற பயன்பாட்டால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆற்றுப்படுகை முழுதும் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், சுற்றி உள்ள சாலை மற்றும் குடியிருப்புகளிலும் புகை பரவி பல தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, அப்பகுதி பாலாற்றங்கரை ஒட்டி உள்ள அமிர்தம் தனியார் மழலையர் பள்ளி வகுப்பறையிலும் ,புகை பரவி குழந்தைகள் பலருக்கும் மூச்சுச் திணறல் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் குழந்தைகளை மீட்டு, புகை பரவாதவாறு கதவு மற்றும் ஜன்னல்களை மூடி தனி அறையில் பாதுகாப்பாக இருக்க செய்தனர். தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
Next Story

