ராமநாதபுரம் சொத்துக்களை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் மாவட்டம் சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம், கோயில் நிர்வாகம் மற்றும் சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் படி தேவரின் நேரடி வாரிசுகளான எட்டு பேரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தேவரின் வாரிசுகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தையான உக்கிரபாண்டி தேவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவி இந்திராணி இரண்டாவது மனைவி நாகம்மாள். முதல் மனைவி இந்திராணியின் மகனான முத்துராமலிங்கத் தேவருக்கு திருமணம் ஆகாததால் வாரிசுகள் இல்லை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கடந்த 1963 ஆம் ஆண்டு காலமானார். உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவியான நாகமாலுக்கு இந்திராணி என்ற மகள் உள்ளார். இந்திராணிக்கு திருமணமாகி நாகூர் கனி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு இந்திராணி உயிரிழந்தார். சுதந்திர போராட்ட வீரர் மறைந்த முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டி தேவரின் தங்கச்சி அதாவது முத்துராமலிங்க தேவரின் அத்தை மகனான தங்கவேலு மற்றும் மகளான காந்தி மீனாள் ஆகிய இருவரும் முத்துராமலிங்க தேவருக்கு நேரடி வாரிசு என கூறி நினைவிடம் மற்றும் அவர் வாழ்ந்த வீடு உள்ளிட்டவற்றை நிர்வாகித்து வந்த நிலையில் முத்துராமலிங்க தேவரின் தந்தையான உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி வழியில் வந்த எட்டு பேரன் பேத்திகள் மட்டுமே முத்துராமலிங்க தேவரின் நேரடி வாரிசு என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தேவரின் நினைவிடம் மற்றும் வாழ்ந்த வீடு உள்ளிட்டவற்றை நிர்வாகித்து வரும் காந்தி மீனாள் தரப்பினர் தான் நேரடி வாரிசு என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் காந்தி மீனாள் நேரடி வாரிசு இல்லை எனவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொத்துக்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என தீர்ப்பளித்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது வரை காந்தி மீனாள் தேவரின் நினைவிடம் மற்றும் கோயில் நிர்வாகத்தையும், தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் பணத்தையும் தேவரின் நேரடி வாரிசுதாரர்களான எட்டு பேரிடம் ஒப்படைக்கவில்லை எனவும், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை சமுதாய சடங்குகளில் நேரடி வாரிசுகள் 8 பேர் பங்கு கொள்ளவும் மாவட்டத்தில் இருக்கும் தேவரின் அனைத்து சொத்துக்களையும் எட்டு பேருக்கு சரிசமமாக பகிர்ந்து அளிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் தேவரின் நேரடி வாரிசுகளான எட்டு பேரும் கூட்டாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் விரைவில் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story



