நாவல் பழம் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து மனைவி கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தவர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் நாவல் பழம் பறிக்க ஏறியவர் தவறி விழுந்து மனைவி கண் முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தவிட்டுமேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் செந்தில் குமார்( வயது 35). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமாகி மோனிஷா (29) என்கிற மனைவியும், நித்தின் குமார் என்கிற 2 1/2 என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மோனிஷா கர்ப்பமாக இருப்பதால் அவரை பரிசோதனைக்காக தனது காரில் ஊட்டிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை முடிந்த பிறகு மாலை சுமார் 5.30 மணியளவில் குன்னூர் அளக்கரை வழியாக தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். வரும் வழியில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகே உள்ள நகா மரத்தில் நாவல் பழங்கள் பழுத்து குலுங்குவதைக் கண்ட அவர் காரை நிறுத்தி விட்டு, பழங்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். பழங்களை பறித்த பிறகு மரத்தில் இருந்து இறங்கும் போது கால் தவறி அவர் கீழே இருந்த பாறை மீது விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவ்வழியாக வந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்திருப்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கோத்தகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் ஏறி பழத்தைப் பறிக்க சென்ற செந்தில் குமார், மனைவி மற்றும் மகன் முன் துடிதுடித்து இறந்த சம்பவம் தவிட்டுமேடு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




