மின்சாரம் தாக்கி காயமடைந்த மயிலை காப்பாற்றிய பொதுமக்கள் – சமூக விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்டு !
கோவையில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த ஒரு மயிலை பொதுமக்கள் காப்பாற்றிய நிகழ்வு பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. தேசிய பறவையாக விளங்கும் மயில்கள், கோவை மாநகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் கணிசமான அளவில் காணப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், மருத்துவ பயன்பாடு மற்றும் உணவுக்காக சிலர் மயில்களை வேட்டையாடிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத் துறையினர் விழிப்புணர்வும் தீவிர கண்காணிப்பும் மேற்கொண்டதன் மூலம் இந்த அவலங்கள் தடுக்கப்பட்டன. எனினும், சமீபக் காலமாக மயில்கள் மின்கம்பங்களில் அமர்வதால் மின்சாரம் தாக்கி காயமடையும் மற்றும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜி.வி. ரெசிடென்சி அருகே நேற்று ஒரு மயில் மின்கம்பத்தில் அமர்ந்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதியிலுள்ள சில பொதுமக்கள் மயிலை மீட்டு முதலுதவி செய்தனர். மயிலுக்கு தண்ணீர் அளித்து, அதன் உயிரை காப்பாற்றியதால் தற்போது அது சற்றே நிம்மதியுடன் அங்கும் இங்கும் நடமாடும் நிலையில் உள்ளது. இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் பலர் பாராட்டியுள்ளனர். பசுமை மற்றும் உயிரினங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வை இந்த நிகழ்வு மீண்டும் வலியுறுத்துகிறது.
Next Story



