ராமநாதபுரம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ.5கோடி மதிப்பீட்டில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கமுதி கோட்டைமேட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இளைஞரணி அமைப்பு செயலாளர் சப்பாணிமுருகன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கமுதி வடக்கு ஒன்றிய தலைவர் திருக்குமரன் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் கமுதி தெற்கு ஒன்றிய செயலாளராக மூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் முதன்மை தொழிலாக விவசாயம் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் விவசாயிகளின் சிபில் ஸ்கோர் முறை கடைபிடிப்பதை ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகாயை சேமிப்பு கிடங்கில் பாதுகாத்து விவசாயிகள் நேரடியாக உரிய லாபத்தில் விற்பனை செய்யவும், மதிப்புக்கூட்டி, தரம் உயர்த்தி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வும், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் கமுதியில் ரூ. 5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என 2023 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அதற்கான முதற்கட்ட பணிகள் கூட துவங்கவில்லை.எனவே விவசாயிகளின் நலன் கருதி கமுதியில் மிளகாய் மண்டலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் முனீஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சித்தன்ஜி நன்றி கூறினார்.
Next Story

